ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான முடிவுகளைக் கொண்டு வரும், அதே சமயம் எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்ற தத்துவ கோட்பாடே ஈர்ப்பு விதியாகும்.

ஈர்ப்பு விதி, Law of attraction

நமது எண்ணங்கள் அனைத்துமே ஒரு வித ஆற்றல் மற்றும் சக்தியின் வடிவம்தான். நாம் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம், பணவரவுகள், வசதிவாய்ப்புகள், நாட்டுப்புறவுகள், சொந்தங்கள் என நம் வாழ்க்கையின் அனைத்திலும் நமக்கு வெற்றிகிடைக்கும் என்பதே ஈர்ப்பு விதியின் அடிப்படையாகும்.

ஈர்ப்பு விதி எப்படி வேலை செய்கிறது?

நம் எண்ண அதிர்வலைகள் ஒருவித ஆற்றலாக மாறி பிரபஞ்சத்தை சென்றடையும் போது நமது எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகின்றன. இதனால்தான் நாம் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்கும் போது அது அப்படியே நிறைவேறுகிறது. அதே போன்று இது நடக்குமா நடக்காதா என்று எதிர்மறையாக நாம் யோசிக்கும் போது அப்படியே எதிர்மறையாக நடந்துவிடுகிறது.

ஈர்ப்பு விதியை எப்படி உபயோகப்படுத்துவது?

இப்போது ஈர்ப்பு விதியைப் பற்றி தெரிந்துக்கொண்டீர்கள். இதை நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது? ஈர்ப்பு விதியின் தத்துவப்படி உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். உங்கள் எண்ணங்களை முழுவதுமாக எங்கே செலுத்திகிறீர்களோ அதை உங்களிடம் நீங்கள் ஈர்க்கிறீர்கள். இது இப்படித்தான் நடக்கப்போகிறது என்று நீங்கள் எதை எப்படி கற்பனை செய்கிறீர்களோ எதை நீங்கள் முழுவதுமாக நம்புகிறீர்களா அதுதான் அப்படியே நடக்கும். இதனால் தான் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். எனவே உங்கள் வாழ்க்கையை உங்கள் எண்ணங்களால் மாற்றி அமைக்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

  • எப்பொழுதும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.
  • உங்கள் லட்சியங்களை தொடர்ந்து மனதில் கற்பனையில் காட்சிப் படுத்துங்கள்.
  • எதையும் நேர்மறை எண்ணங்களுடன் அணுகுங்கள்.
  • உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு மந்திரத்தை போல தொடர்ந்து கூறிக்கொண்டே இருங்கள்.
  • எதிர்மறை வார்த்தைகளை மறந்தும் உபயோகப்படுத்தாதீர்கள்.
  • இல்லை, கஷ்டம், பிரச்சனை, நடக்காது போன்ற எதிர்மறை வார்த்தைகளுக்கு பதிலாக நேர்மறையாக சொல்லிப்பழகுங்கள்.

உதாரணமாக ‘கையில் பணம் இல்லை’ என்று சொல்வதற்கு பதிலாக ‘பணம் வரவேண்டியுள்ளது’ அல்லது ‘பணம் வந்துகொண்டிருக்கிறது’ என்று சொல்லுங்கள். ‘வாழ்க்கையில் ஒரே கஷ்டம்’ என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக, ‘வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது’ என்று சொல்லுங்கள். நீங்கள் இதை சொல்லும்போது மனதார, உண்மையில் நடப்பது போன்று சொல்லவேண்டும். இப்படி சொல்வதால் நேர்மறை எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தை சென்றடைந்து, உங்கள் அப்படியே செயல் வடிவம் பெரும்.

சரி இதெல்லாம் எப்பொழுது நடக்கும்? நான் ஒன்று நடக்கவேண்டும் என்று நினைத்தால் அது உடனே நடந்துவிடுமா என்றால்? இல்லை என்று தான் சொல்லமுடியும். ஒரு விஷயத்தை நீங்கள் தொடர்ந்து நினைக்கும் போது மட்டுமே, அதுவும் முழுமனதுடன் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நினைக்கும்போது மட்டுமே அது நடக்கும். இதற்கு நீங்கள் தினமும் அரைமணி நேரம் தியானத்தில் அமர்ந்து உங்கள் எண்ணங்களை மனதில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவதனால் என்ன பயன்?

ஈர்ப்பு விதி உங்கள் வாழ்க்கையை நேர்மறை பாதையில் செலுத்தி முன்னேற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இது உங்களின் ஆன்மீக எண்ணங்களை தூண்டுவதோடு வாழ்க்கையை ஒரு புது கோணத்தில் உங்களை பார்க்க வைக்கும். பிரபஞ்ச அதிர்வலைகளோடு உங்கள் அதிர்வலைகள் ஒத்துப்போவதை உணர்வீர்கள், பிரபஞ்ச சிமிங்ஜைகளை புரிந்துக்கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்பிருந்த வெறுப்பு விரக்தி ஆகியவற்றை துறந்து உங்கள் லட்சியங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
உங்களில் நல்ல எண்ணங்கள் உங்களுக்கு நல்லதையே கொண்டுவரும் என்ற நம்பிக்கை மேலோங்கும்.

பிரபஞ்ச சக்தியுடன் உங்கள் நேர்மறை எண்ணங்கள் கலந்து வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள்.

பிரபஞ்சத்திற்கு நன்றி!!!