குரு சுக்கிரன் ஒரே வீட்டில் அல்லது ஒரே ராசியில் இருந்தால் என்ன பலன்?

சுக்கிரனும் ஒரு குரு தான். குரு தேவகுரு(தேவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) என்று அழைக்கப்படுகிறார், சுக்கிரன் அசுர குரு (அசுரர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்) என்று அழைக்கப்படுகிறார். எனவே குரு சுக்கிரன் இணைவு என்பது இரு குருக்களின் இணைவாகும். இருவருமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட இரண்டு வலுவான கிரகங்கள் இணைந்திருந்தால் என்ன பலன் என்று பாப்போம்.

குரு சுக்கிரன் இணைவுப் பலன்

குருவும் சுக்கிரனும் ஒரே வீட்டில் இணைந்து இருந்தால் ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டம் உடையவர். வசதி வாய்ப்பிற்கு குறைவிருக்காது. குரு என்பவர் நமக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொடுப்பவர். சுக்கிரன் என்பவர் மஹாலக்ஷ்மியின் அம்சம். பொன்பொருள் செல்வம் தனம் சொத்து ஆடம்பர வாழ்க்கை அனைத்திற்கும் அதிபதி. எனவே இந்த இணைவு பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த இணைவு உள்ளவர்கள் அதிக சொத்துக்களை சம்பாதிப்பர் ஆடம்பரமாக வாழ்வர்.

சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்கு பிறகு ஜாதகரின் வாழ்க்கை தரம் உயரும். வாழ்க்கை துணை மூலமாக பணம் சொத்து சேரும். நல்ல குணமுள்ள வழக்கைத் துணை அமையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

குரு சுக்கிரன் இணைந்திருப்பதால் ஜாதகர் எப்பொழுதும் ஜாலியாக இருப்பார், அனைவரிடமும் அன்பாக பழகுபவர், பிறரை மகிழ்வித்து மகிழ்பவர். இரக்க குணமும் எதார்த்த உள்ளமும் உடையவர். வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்கப் பிறந்தவர்கள், அடிக்கடி பயணம் செல்ல விரும்புவார்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உடையவர்கள். பார்ட்னெர்ஷிப் தொழில்கள் இவருக்கு ஏற்றவை.

இவை பொதுவான பலன்கள். குருவும் சுக்கிரனும் எத்தனை பாகையில், எந்த வீட்டில் இணைந்திருக்கிறார்கள் மற்றும் குரு சுக்கிரன் வலுவை பொறுத்து பலன்கள் மாறும்.

SHOP ON AMAZON

லக்கினத்தில் குரு சுக்கிரன் இணைவு

லக்கினத்தில் குரு பகவான் திக் பலம் பெறுவதால் லக்கினத்தில் குரு மிகுந்த பலம் பெறுவார். சுக்கிரனைவிட அதிக பலம் பொருந்திக் காணப்படுவார். எனவே, ஜாதகரிடம் குருவின் அம்சம் அதிகம் காணப்படும். ஜாதகர் நன்கு படித்த பண்புள்ள நபராக இருப்பர். பிறரை எளிதில் கவர்ந்திழுப்பார்.

ஆசிரியர்கள் வேலை இவர்களுக்கு ஏற்றதாகும். ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், இசையமைத்தல், ஆடல், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல், சிற்பக்கலை, அழகுக்கலை, மேடை நாடகங்கள், கலைப்பொருட்கள் தயாரித்தல், ஒப்பனை, மாடலிங், கட்டிடக்கலை போன்றவற்றில் கைத்தேர்ந்தவர்.

இரண்டில் குரு சுக்கிரன் இணைவு

இரண்டாமிடம் குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம் மற்றும் பணபர ஸ்தானமாகும். இந்த இடத்தில குருவும் சுக்கிரனும் இணையும் பொழுது செல்வச்செழிப்பு, நல்ல குடும்பம், நல்ல திருமண வாழ்க்கை, குடும்பச்சொத்துக்கள், சுகம், குடும்பத்தின்மூலமாக தினசரி பணம் வந்துகொண்டே இருக்கும். இரண்டாம் பாவம் தனஸ்தானம் என்பதால் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அதிக பணவரவு மற்றும் சொத்திக்களை தரும். இந்த கிரகங்களுடன் வேறு கிரகங்கள் சேர்ந்தால் இந்த பலன்கள் அப்படியே மாறிவிடும் அல்லது குறையும் அல்லது மந்தமாக தாமதமாக கிடைக்கும்.

மூன்றில் குரு சுக்கிரன் இணைவு

மூன்றாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் இருப்பது மிக விசேஷமானது. குரு சுக்கிரன் இருவரும் தங்களது ஏழாம் பார்வையால் உங்களது பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் நீங்கள் தான் மூத்த வாரிசாக இருக்கக்கூடும். உங்களுக்கு அடுத்து கண்டிப்பாக ஒரு இளைய சகோதரர் அல்லது சகோதரி இருப்பார். அவர்கள் மூலம் எப்பொழுதும் உங்களுக்கு ஆதரவு மற்றும் ஆதாயம் கிட்டும்.

மூன்றாம் இடம் கற்பனைத்திறனை குறிக்கும், கலைகளில் நல்ல திறமை இருக்கும். எனவே மூன்றாம் வீட்டில் குரு சுக்கிரன் இணைந்து இருப்பவர்களுக்கு சினிமா மாடலிங் போன்ற துறைகளில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இவர்கள் இசை கருவிகள் கற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருப்பர்.

நான்கில் குரு சுக்கிரன் இணைவு

நான்கில் குரு சுக்கிரன் இணைந்திருப்பவர்கள் உயர்கல்வி கல்லூரி படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். படிப்பில் சிறந்து விளங்குவர். நான்காமிடம் தாயார் ஸ்தானம் என்பதால் தாயின் மூலமாக கல்விக்கு உதவியுண்டு. அனைத்திலும் உங்களது தாயாரின் ஆதரவு கிட்டும். தாயார் நல்ல ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் இருப்பார்.

ஜாதகர் சொந்த வீடு வாகனம் என்று நல்ல வசதியான வாழ்க்கை வாழ்வர். வீட்டை நல்ல கலைநயத்துடன் அமைப்பார். தொழில் நன்றாக அமையும், அமோகமாக இருக்கும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். நான்கில் சுக்கிரன் திக் பலம் பெறுவது மேலும் சிறப்பாகும், எதிர் பாலினர்களை இவர்கள் எளிதில் ஈர்ப்பர். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ஐந்தில் குரு சுக்கிரன் இணைவு

குருவும் சுக்கிரனும் ஐந்தாம் வீட்டில் இருப்பது மிக மிக அற்புதமான இணைவாகும். ஜாதகர் நல்ல புத்திசாலியாக படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார். மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு (Phd) போன்றவற்றிற்கு ஏற்ற அமைப்பாகும். இந்த அமைப்பு நல்ல கற்பனைவளத்தை தரும். ஜாதகர் அனைவரிடமும் நட்பாகவும் வாசிகரமாகவும் பழகுவார். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாக இருப்பர். குழந்தைகள் இவரை நன்கு கவனித்துக்கொள்வர். கல்வி, வேலை, குழந்தைகள், திருமணம், ஆரோக்கியம் என எல்லா விதத்திலும் இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அமைப்பாகும்.

ஆறாம் வீட்டில் குரு சுக்கிரன் இணைவு

ஆறாவது வீட்டில் குருவும் சுக்கிரனும் இணைவதால் உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரச்சனைகள் ஏற்படும். சொத்து அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சட்டச் சிக்கல்களை உறவினர்கள் ஏற்படுத்துவர். இதனால் மனைவியுடன் சட்டப் பிரச்சனைகளை ஏற்படுலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள், நண்பர்களுடன் தவறான புரிதல் போன்றவற்றைக் கொடுக்கலாம். பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றதல்ல. இவர்கள் எடுக்கும் மருத்துவ சிகிச்சை உடனடியாக சரியாகாது.

இந்த இணைவினால் உங்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை தரும்.

SHOP ON AMAZON

ஏழில் குரு சுக்கிரன் இணைவு

ஏழில் குரு சுக்கிரன் இணைத்துள்ளவர்கள் நல்ல பண்புடன் அனைவரையும் சரிசமமாக நடத்துவீர்கள். இவர்களது திருமண வாழ்க்கை காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நன்கு படித்த சிவந்த நிறமுடைய அழகான வாழ்க்கைத்துணை கிடைக்கும். பெரும்பாலும் இவரது வாழ்க்கைத்துணை பள்ளி கல்லூரி ஆசிரியராக இருப்பார் அல்லது மெடிக்கல் ஷாப், துணிக்கடை, காஸ்மெட்டிக் கடை அல்லது உணவகம் நடத்துபவராக இருப்பார்.

நீங்கள் காதலுக்காகவும் மற்ற உறவுகளுக்காகவும் அதிகம் தியாகம் செய்வீர்கள். நல்ல வசதியான நண்பர்கள் கிடைப்பார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவீர்கள். குடும்பத்தில் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சுமூகமாக தீர்த்துவைப்பீர்கள். தொழிலில் நம்பிக்கையான நீண்டநாள் நிலைக்கும் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். இவையனைத்திற்கும் முக்கிய காரணம் நீங்கள் நேர்மையுடனும் தொழிலில் கைதேர்ந்தவராகவும் இருப்பதினால் தான்.

எட்டாமிடத்தில் குரு சுக்கிரன் இணைவு

எட்டில் குரு சுக்கிரன் இணைவு நீண்ட ஆயுளைத்தரும். ஜாதகர் நல்ல புத்திக்கூர்மையுடன் இருப்பார். ஆஸ்த்மா சளி தொந்தரவுகள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். குடும்ப சொத்துகள் இருந்தாலும், ஜாதகருக்கு நல்ல வருமானம் எதுவும் இருக்காது. பிறர் சம்பாத்தியத்தில் காலத்தை ஓட்டுவார். நல்ல வசதியான வாழ்க்கைத்துணை கிடைக்கும், ஆனால் கருத்துவேறுபாடுகள் அதிகம் இருக்கும். திருமண வாழ்க்கை நிலைக்காது.

இவருக்கு ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு இருக்கும். குடும்பத்தின் மீது மிகுந்த பாசமுடையவர். அன்புள்ளம் கொண்டவர், ஆனால் பணத்திற்காக பொய்ச்சொல்லி பிறரை ஏமாற்றும் வாய்ப்புண்டு. பேசியே காரியத்தை சாதிப்பார்.

ஒன்பதில் குரு சுக்கிரன் இணைவு

ஒன்பதில் குரு சுக்கிரன் இணைந்திருப்பது லட்சுமி யோகமாகும். இந்த இணைவு இருக்கும் ஜாதகர் நல்ல வசதியான பணக்கார குடும்பத்தில் பிறந்திருப்பார். பல சொத்துக்களுக்கு வாரிசாக இருப்பார். வாழ்க்கையில் அணைத்து வசதிகளுடனும் வாழ்வார். ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு உண்டு. கோவில்களுக்கும் ஆன்மீக காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வார். ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபடுவார்.

இவர் இயற்கையிலேயே நல்ல பண்புடனும், நேர்மையுடனும், அனைவரிடமும் அன்பாக பழகுபவராகவும் இருப்பார். சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருப்பார், நல்ல பண்புள்ள குழந்தைகள் இருக்கும். நல்ல தேக ஆரோகியதுடன் இருப்பார்.

பத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை

பத்தாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் அமைந்திருப்பது தொழில் மற்றும் வேலைக்கு மிகவும் நல்ல இடமாகும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வங்கித் துறை, முதலீட்டு வங்கி, மருத்துவத் துறை குறிப்பாக மருத்துவத் துறையில் ஆசிரியர் அல்லது விரிவுரையாளர் போன்ற வேலைகளில் சிறப்பாக செயல்படுவர். நல்ல வருமானம் ஈட்டுவர்.

பத்தாம் வீடு ஒரு உபஜெய மற்றும் கேந்திர வீடு ஆகும். இந்த வீட்டில் நன்மை தரும் இந்த இரு கிரகங்கள் அமைவது உங்களை உங்கள் வேலையில் நேர்மையானவராகவும் உண்மையானவராகவும் மாற்றும், ஆனால் வேலையில் உயர் பதவிகளை அடைவதற்கு தீய கிரகங்கள் சிறந்த பலன்களை அளிக்கின்றன. செவ்வாய் அல்லது சனி அல்லது சூரியன் போன்ற கிரகங்கள் பத்தாம் வீட்டில் குரு-சுக்கிரன் சேர்க்கையுடன் சேரும்போது, உங்களை ஒரு தலைமை பதவிக்கு கொண்டு செல்லும். குறிப்பாக சூரியன் மிகவும் நல்லது.

இந்த இணைவு கொண்ட ஜாதகர்கள் பணம் பரிசு பொருள்கள் கொடுத்தாவது தங்கள் நோக்கத்தை அடைய தயங்குவதில்லை. இவர்கள் நல்ல மத்தியஸ்தர்கள்.

பதினொன்றில் குரு சுக்கிரன் சேர்க்கை

பதினொன்றாம் பாவத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் மிக பாக்கியசாலிகள். பணம் மற்றும் செல்வம் சேர்ப்பதில் இவர்கள் அதிர்ஷடசாலிகள். இவர்களுக்கு வருமானம் பல வழிகளில் வரும். எதை செய்தாலும் அதில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பாதிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் பணம் முதலீடு, பங்குச் சந்தை, பொருளாதாரம் போன்றவற்றில் நல்ல ஆலோசகர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பு இவர்களுக்கு பெரும்பாலும் அனைத்திலும் லாபத்தை ஈட்டித்தரும்.

நல்ல பண்புள்ள அழகான வசதியான துணை அமைந்து திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.  நண்பர்கள் பெண்கள் மற்றும் மூத்த சகோதரர் மூலமாக பணவிசயத்தில் உதவி கிடைக்கும். ஜாதகர் ஆன்மீகத்தில் ஈடுபடு கொண்டவராக கருணையுள்ளத்துடன்  தெய்வப்பணி மற்றும் சமூகத் தொண்டாற்றுவார்.

பண்ணிரெண்டில் குரு சுக்கிரன் இணைவு

பன்னிரெண்டாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் இணைவது நல்லதல்ல. ஜாதகருக்கு வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும். வசதியாக வாழ கடன் வாங்கியாவது செலவு செய்வார். மது போதை புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்கும். வருமானம் குறைவாக இருந்தாலும் வெளியே மற்றவர்களிடம் வசதியானவர் போல காட்டிக்கொள்வார்.

பணத்தாசை கொண்டவர். எல்லா வசதிகளுடன் வாழ்ந்தாலும் கடன் பற்றிய சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும். இதனால் மனநிம்மதி கெடும்.  பொருளாதாரம் பற்றி இவர்கள் நல்ல ஆலோசனை பிறருக்கு வழங்கினாலும் இவர்களுக்கு அது வேலை செய்யாது. இவர்கள் வெளிநாட்டு வேலை அல்லது தொழில் செய்வது நன்மை பயக்கும்.

பன்னிரெண்டாம் பாவம் ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இவர்கள் கடவுள் பக்தி நிறைந்தவராக இறை பணிகளை தவறாமல் பின்பற்றுபவராக இருப்பார். நல்ல பண்புள்ள குழந்தைகள் அமைவர். இவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகுவார்கள், பேச்சில் வல்லவர்கள். இவருக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல பண்புடனும் புத்திசாலியாகவும் இருப்பார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கும்.