ஜோதிடக்கலை என்பது கடலுக்குள் இருக்கும் உயிரினங்களை எண்ணுவது போன்றது. அதில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. ஜாதகத்தில் கிரகங்களினால் ஏற்படும் பலன்களைப் பற்றி கணிப்பதில் பல விதிகள் இருக்கின்றன. ஜாதகத்தில் ஒரு கிரஹத்தின் வலிமையை அறிந்தால் தான் அந்த கிரகம் அதன் தசா புக்தி காலத்தில் நன்மை தருமா அல்லது தீமை தருமா என்று சொல்ல முடியும். ஆட்சி பெற்ற கிரஹம் எல்லாம் நன்மை செய்யவதில்லை, அதே போன்று நீசம் அடைந்த கிரகம் எல்லாம் தீமை செய்வதுமில்லை.

directional strength of planets

ஒரு கிரகத்தின் பலத்தை கணிக்க அதன் ஸ்தான பலம், திக் பலம், திருக் பலம், கால பலம், அயன பலம், சேஷ்ட பலம் ஆகியவற்றை பார்த்துதான் கணிக்க வேண்டும். இந்த ஆறு பலங்களும் ஷட் பலங்கள் எனப்படும். ஷட் பலத்தில் ஒரு கிரகத்தின் வலிமையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் நிலையை அறிய முடியும்.

திக் பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையினால் அது பெரும் பலத்தை குறிக்கும். இந்த பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சி பெற்ற கிரஹத்திற்கு ஒப்பான பலனை தரும். ஜாதகத்தில் ஒவ்வொரு பாவமும் ஒரு திசையை குறிக்கும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு திசையில் முழு பலத்துடன் இருக்கும். உதாரணமாக லக்கினம் கிழக்கு திசையை குறிக்கும். நான்காம் பாவம் வடக்கையும் ஏழாம் பாவம் மேற்கையும் பத்தாம் பாவம் தெற்கையும் குறிக்கும். குருவும் புதனும் கிழக்கில் அதாவது லக்கினத்தில் மிகுந்த பலத்துடன் இருப்பார்கள். நான்கில் சந்திரன் மற்றும் சுக்கிரன், ஏழில் சனியும், பத்தில் சூரியன் மற்றும் செவ்வாயும் திக்பலம் பெறுவார்கள்.

கிரகங்கள் ஒரு வீட்டில் முழு திக் பலம் பெறுவதை போல அதற்க்கு நேர் எதிரான வீட்டில் முழு பலத்தையும் இழக்கும். உதாரணமாக பதில் திக் பலம் பெரும் சூரியன் நான்கில் திக் பலத்தை இழந்துவிடும்.

திக் பலம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

சூரியன் திக்பலம் பெற்றால், ஜாதகருக்கு பேரும் புகழும் சமூகத்தில் மிகுந்த மரியாதையும் செல்வமும் கிட்டும். அனைவருக்கும் தெரிந்தவராக இருப்பார். அரசிடமிருந்து அணைத்து சலுகைகளும் கிடைக்கும்.

சந்திரன் திக் பலம் பெற்றவர்களை ஒளிபொருந்திய முகத்துடனும் நல்ல பண்புகளுடனும் தாயுள்ளதுடனும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பார்கள். மிகுந்த மன தைரியத்துடனும் உறுதியுடனும் காணப்படுவார்கள்.

செவ்வாய் திக் பலம் பெற்ற ஜாதகர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள். வாழ்க்கையில் எப்படிப்பட்ட சூழலிலும் இவர்கள் ஜெயிப்பார்கள். அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக சவால் விடுபவர்களாக இருப்பார்கள். தடைகளை மீறி வெற்றிபெறும் தைரியசாலிகளாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் புதன் திக் பலம் பெற்றவர்கள் நன்கு படித்தவர்களாகவும் புத்திசாலிகளாகவும் நகைச்சுவை விரும்பிகளாகவும் நல்ல கணக்காளர்களாகவும் அனைவருடனும் நட்பாக பழகுபவர்களாகவும் இருப்பார்கள்.

குரு திக் பலம் பெற்றவர்கள் நன்கு படித்தவர்களாக சிறுவயது முதலே தத்துவங்கள் பேசுபவர்களாக நல்லொழுக்கம் பெற்றவர்களாக மதப்பற்று உடையவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெற்றவர்களாக இருப்பார்கள்.

சுக்கிரன் திக்பலம் பெற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தின் மூலம் மகிழ்ச்சி ஆனந்தம் சகல சௌபாகியங்களும் கிட்டும். இசை நடனம் ஓவியம் வரைதல் என எதாவது ஒரு கலையில் ஆர்வத்துடன் இருப்பார்கள். சொந்த வீடு வாகனம் என ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.

சனி திக்பலம் பெறுவது மிகவும் விசேஷம். பொதுவாக சனி தான் இருக்கும் இடத்தின் பலனை தாமதமாக தான் கொடுக்கும் ஆனால் நல்ல நிரந்தர பலன்களை தரும். எழில் சனி திக்பலம் பெறும் போது தாமதமாக தான் திருமணம் நடக்கும். ஆனால் அந்த திருமணம் நல்லதொரு உறவாக நிலையானதாக இருக்கும்.

திக் பலம் என்ற ஒன்றை மட்டுமே வைத்து ஒரு கிரகத்தின் பலனை சொல்ல முடியாது. மற்ற பலம்களில் அதன் வலிமையை பார்த்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.