வசந்த பஞ்சமி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். மாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் வசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. மிகவும் மங்களகரமான நாளாகவும், மங்கல காரியங்கள் துவங்குவதற்கு ஏற்ற நாளாகவும் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்து, அனைத்து தரப்பு மக்களும் பட்டம் விட்டு இந்த நாளை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இது பசந்த பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. குளிர்காலம் நிறைவடைந்து, வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எனவே இது விவசாயிகளுக்கும் முக்கியமான நாளாகும். வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமியில் இருந்து 40வது நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது சரஸ்வதிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதனால் மக்கள் மிக பயபக்தியுடனும் இந்த நாளை முக்கிய விரத நாளாகவும் கடைபிடிக்கிறார்கள்.
இந்த நாளில் சரஸ்வதியை வழிபடுவது ஏன்?
வசந்த பஞ்சமி நாள் சரஸ்வதி தேவியின் பிறந்தநாளாக கருதப்படுகிறது. இதனால் கல்வி, கலைகள், புதிய பயிற்சிகள் துவங்குவதற்கு ஏற்ற நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.இந்த நாளில் சரஸ்வதிக்கு விரதம் இருந்து வழிபடுவதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும், ஞானம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியுடன், விநாயகப் பெருமானின் உருவத்தையும் வைத்து வழிபட வேண்டும். வசந்த பஞ்சமி நாளில் மஞ்சள் நிறம் மிக முக்கியமானதாகும். மஞ்சள் ஆடை உடுத்தி, நெய் விளக்கேற்றி, மஞ்சள் நிற மலர்களால் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். புத்தகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை சரஸ்வதி முன் வைத்து சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். பூஜையில் ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் கலந்து வைக்க வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த நீரை வீட்டில் தெளிக்க வேண்டும், இவ்வாறு செய்வதால் செல்வச்செழிப்பு உண்டாகும்.
வசந்த பஞ்சமி 2024
இந்த 2024 ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 13ம் தேதி இரவு 08.35 மணி துவங்கி, பிப்ரவரி 14ம் தேதி மாலை 06.28 வரை பஞ்சமி திதி உள்ளது. இதில் சரஸ்வதி பூஜை செய்து வழிபடுவதற்குரிய நேரமாக பிப்ரவரி 14ம் தேதி காலை 06.17 முதல் பகல் 12 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மகாலட்சுமி யோகமும் கூடிவருகிறது. இந்த நேரத்தில் சரஸ்வதி தேவியை வணங்கி வழிபடுவதால், ஞானம் பெருகும், தொழில் சிறக்கும், வேண்டும் வரங்கள் கிடைக்கும்.
இன்றைய தினம் சுக்ல பஞ்சமி என்பதாலும் வசந்த பஞ்சமி என்பதாலும் இன்று ஸ்ரீ வராஹி அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாளாகும். சிவப்பு நிற மலர்களால் வராஹி அம்மனுக்கு அலங்கரித்து, நெய்வேத்யமாக மாதுளம் பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவைகளை வைத்து வராஹி அம்மனை வழிபடவேண்டும்.
இன்று புதன் கிழமையும் கூடி வருவதால், அன்னை வராஹி தேவி மற்றும் மஹா விஷ்ணுவை வணங்கி மேன்மை அடைவாேம்.