புது வருடம் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. புத்தாண்டு
கொண்டாட்டத்திற்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்துக் கொண்டிருப்பர். அதே சமயம் வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

புத்தாண்டு தொடர்பான முக்கியமான மற்றும் மிகத் துல்லியமான கணிப்புகள் இரத்தின சுருக்கமாக இங்கே உங்களுக்கு வழங்கப்படுகின்றன, இதன் மூலம் புத்தாண்டு உங்களுக்கு எவ்வளவு சிறப்பானதாகவும், எவ்வளவு சாதகமாகவும் அதிர்ஷ்டமானதாகவும் அமையப் போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேஷம் 2024 ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் 2024 பொருளாதார முன்னேற்றத்தை தரும், மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். காதல் வாழ்க்கை , குடும்ப வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு சீராக இருந்தாலும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. பெற்றோர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

ரிஷபம் 2024 ராசி பலன்

வரப்போகும் புத்தாண்டு 2024 ரிஷப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும். புதிய உறவுகள் மலரும், பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். பார்ட்னெர்ஷிப் பிசினஸ் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் முன்னேற்றம் உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும். காதல் கசக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் சேரும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

மிதுனம் 2024 ராசி பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு வரும் புது வருடம் 2024 நல்லதும் கெட்டதும் கலந்த பலன்களைத் தரும். நீண்ட நாள் கடன் அடைபடும். பொருளாதார முன்னேற்றம் உண்டு, குடும்பத்தின் ஒற்றுமையில் கவனம் தேவை. புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும், வேலைப்பளு கூடும், சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டு. ஆன்மீக எண்ணம் மேலோங்கும். குடும்பப் பிரச்சனைகளால் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும். கண் வயிறு சம்பந்தமான வியாதிகள் சளி தொந்தரவுகள் வரும் என்பதால் உடல் நலனில் எச்சரிக்கை அவசியம்.

கடகம் 2024 ராசி பலன்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சிறப்பானதாக இருக்கும். வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும். செல்வம் சேரும், பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபடுவீர்கள், சிலருக்கு யாத்திரை சென்றுவர வாய்ப்புக்கிட்டும். வேலை பளு கூடும், மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள், ப்ரோமோஷன் உண்டு. காதல் வாழ்க்கை சீராக இருக்கும், திடீர் செலவுகள் ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம் 2024 ராசி பலன்

இந்த வருடம் 2024 சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழிலில் அபிவிருத்தி உண்டு, வியாபாரத்தை விரிவுபடுத்துவர். வெளியூர் வெளிநாடு பயன்கள் இந்த வருடம் சாத்தியமாகும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். விருந்து விழாக்களை ஏற்பாடு செய்வீர்கள். தந்தையுடன் இருந்த மனஸ்தாபம் விலகும். காதல் வாழ்க்கையில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். வேலையில் இடமாற்றம் உண்டு. மாணவர்கள் புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்வர்.திருமண வாழ்க்கை சீராக இருக்கும், எதிர்பாராத செலவுகள் இருக்கும்.

கன்னி 2024 ராசி பலன்

இந்த 2024 வருட ஆரம்பத்தில் சனி இராசிக்கு ஆறில் இருப்பதால் உடல்நிலை மந்தமாக இருக்கும், சற்று கவனம் தேவை. வேலையில் அவ்வப்போது தொய்வு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் வரும் பிரச்சனைகளை அவ்வப்போது சரிசெய்துவிடுவது நல்லது. நட்பு வட்டம் அதிகரிக்கும், காதல் மலரும். சமூகத்தில் பெயர்கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்குவழியை விட்டுவிட்டு நேர்மையுடன் இருக்கவும். தாயார் மற்றும் வாழ்க்கை துணையின் உடல்நலனில் கவனம் தேவை, குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிக்க வேண்டாம். சபலத்தை விட்டுவிட்டால் இல்லற வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

துலாம் 2024 ராசி பலன்

துலாம் ராசி அன்பர்கள் வியாபாரம், வேலை, தொழில், சொத்துக்கள், குடும்பம் அனைத்திலும் நேர்மை நாணயத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். பார்ட்னெர்ஷிப் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பார்ட்னர் அமைவர், கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும், வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காது போகும். மாணவர்கள் நன்கு படிப்பர், போட்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார். புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும், வேலையில் ப்ரோமோஷன் உண்டு.

விருச்சிகம் 2024 ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு இந்த 2024 வருடம் புதிய முயற்சிகளை தொடங்க ஏற்ற வருடம். உங்கள் நன்னடத்தையாலும் பேச்சாலும் அனைவரையும் சுலபமாக கவர்ந்துவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், பணவரவு அபரிமிதமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் கைகூடும், காதலுக்காக எதையும் விட்டுக்குடுப்பீர்கள். வேலை மாறுதல் ஏற்படும். இப்போது இருக்கும் வேலையிலே நன்கு கவனம் செலுத்தினால் ப்ரோமோஷன் கிடைக்க அதிக வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை ஏற்படும். படிப்பிற்காக அதிக நேரம் செலவிடவேண்டும். வருட ஆரம்பத்தில் உடல்நிலையில் அதிக கவனம் தேவை. பேச்சில் எச்சரிக்கை அவசியம். எதையும் யோசித்து பேசுங்கள். எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது.

தனுசு 2024 ராசி பலன்

தனுசு ராசிக்கு இந்த புது வருடம் 2024 அமோகமாக இருக்கும். பணம் பலவழிகளில் வரும், கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் தேவை. வேலையில் தடைகள் வந்து பின்பு சீராகும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. செலவுகள் அதிகரிக்கும், அதற்கு ஏற்றார் போல் பணவரவும் இருந்துகொண்டே இருக்கும். தாயார் உடல் நலனில் அதிக கவனம் தேவை.

மகரம் 2024 ராசி பலன்

மகர ராசிக்கு இந்த புத்தாண்டு 2024 பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். வருடம் முழுவதும் பணவரவு இருந்துகொண்டே இருக்கும். சில தடைகள் வந்துபோனாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். காதல் கைகூடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், கணவன் மனைவி ஒற்றுமை நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பல சாதனைகள் புரிவீர்கள். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் விருத்தி உண்டு. மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தவேண்டும் இல்லையேல் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைப்பதில் சிரமம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறுசிறு தொந்தரவுகள் இருக்கும், பயப்பட தேவையில்லை.

கும்பம் 2024 ராசி பலன்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் 2024 அனைத்திலும் சாதகமானதாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்துடனும் வேலையிலும் குடும்பத்திலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்; ப்ரோமோஷன் உண்டு. தொழில் வியாபாரம் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். வருட ஆராம்பத்தில் மாணவர்கள் படிப்பில் மந்தநிலையே காணப்படும், பின்னர் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்.

மீனம் 2024 ராசி பலன்

மீன ராசிக்காரர்களுக்கு வரும் வருடம் 2024 நல்லதொரு ஆண்டாக இருக்கும். பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழ்நிலை சீராக இருக்கும். குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசுவது நன்மை பயக்கும். மாமனார் வழியில் சொத்துக்கள் சேரும். தொழிலில் அபிவிருத்தி இருக்கும், வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணம் மூலம் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலின் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிய நேரிடும். நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிவரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வேலையில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவார். மாணவர்கள் படிப்பில் அமோகமாக இருப்பர், சிலருக்கு மேல்படிப்பிற்க்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

இவை அனைத்தும் பொதுவான பலன்கள். தங்களுக்கு தற்போது நடக்கும் தசை புத்தி பொறுத்து பலன்கள் மாறுபடும்.